×

மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர்குழு கல்வெட்டு

மதுரை : மதுரை அருகே ஆண்டார் கொட்டாரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர்குழு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலமடை கிராம நிர்வாக அலுவலர் இளங்குமரன் தகவலின் அடிப்படையில் மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் இக்கல்வெட்டை கண்டறிந்தார். இதையடுத்து, பாண்டிய நாட்டு வரலாற்று மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டை ஆய்வு செய்தனர். இக்கல்வெட்டை படித்த ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கம் கூறியதாவது:

இக்கல்லை ஊர்மக்கள் முனியன் கல் என்று அழைக்கின்றனர். நான்கரை அடி உயரமுள்ள இக்கற்பலகையின் மூன்று புறமும் கல்வெட்டுகள் உள்ளது. மொத்தம் 47 வரிகளைக் கொண்டுள்ளது. முதல் ஆறு வரிகள் கிரந்த எழுத்துகளில் வணிகர்களின் கீர்த்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டில் ஐநூற்றுவர் எனும் வணிகக்குழுவினர் அளித்த சாசனம் எனும் பொருள் உள்ள வரிகள் உள்ளன. பல வணிகக் குழுக்கள் ஒன்று கூடி சமயத்தன்மை என்கிற தங்களது தொழில் தர்மத்தைச் சிறப்பாக நடத்துகின்றனர்.

நகரம், கிராமம், மணிக்கிராமம், கோழிக்குறிச்சி, கடிகைத்தாவளம், ஏறுசாத்து, இறங்குசாத்து (ஏற்றுமதி, இறக்குமதி) வணிகர்களுமான திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற குழுவினர் பறம்பு நாட்டுப் பிரிவுக்குள் அடங்கிய இளமைநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த வணிக வீர்கள் இவ்வூரில் ஒரு வணிகத்தாவளத்தை ஏற்படுத்தி காவல் புரிந்து வணிகர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.

இளமை நல்லூர் என்பதற்கு நானாதேசி நல்லூர் என்று மற்றொரு பெயர் வழங்கப்பட்டுள்ளது. இளமை நல்லூர் என்பதே இன்று இளமனூர் என்று அழைக்கப்படும் ஊராக இருக்கலாம். பதினெட்டுபட்டினத்து பதினெண்விசையத்தார் என்ற பெருங்குழுவினர் வணிக வீரர்களைக் கொண்டு வீரத்தாவளம் அமைத்து வணிகம் செய்துள்ளனர். தாவளம் என்பது காவல் அரண்மிக்க தங்குமிடமாகவும், சரக்குப் பெட்டகம் (குடோன்) ஆகவும் செயல்பட்ட இடமாகும்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டு மதுரைக்கு அருகில் கிடைத்திருப்பது வரலாற்று அறிஞர்களுக்கு வியப்பை தந்துள்ளது. இதற்கு முன்னால் நத்தம், கோவில்பட்டி, சத்திரபட்டி, சிவகங்கை மாவட்டம் திருமலை, பிரான்மலை போன்ற இடங்களில் இத்தகைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்துள்ள இக்கல்வெட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கி.பி 13ம் நூற்றாண்டில் வணிகர்கள் தன்னிச்சையாக அரசர்களின் ஆதரவை எதிர்நோக்காமல் செயல்பட்டுள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர்குழு கல்வெட்டு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Pappakkudi ,Andar Kottaram ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி